திருவண்ணாமலை நகரில் உள்ள உலகப் பிரசித்தி பெற்ற பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும் நினைத்தாலே முக்தி தரும் ஸ்தலமாகவும் விளங்கக்கூடிய அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் 10 நாட்கள் நடைபெறும் திருக்கார்த்திகை தீபத் திருவிழா இன்று காலை சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க காலை 5.40 மணியளவில் கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது.
முன்னதாக அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் இரண்டாம் பிரகாரத்தில் விநாயகர், முருகர், அண்ணாமலையார் உண்ணாமலையம்மன், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டு பின்னர் மூன்றாம் பிரகாரத்தில் அமைந்துள்ள தங்க கொடி மரம் அருகே பஞ்ச மூர்த்திகள் எழுந்தருளினர். பின்னர் சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க சரியாக அதிகாலை 5.40 மணி அளவில் தங்க கொடிமரத்தில் கொடியேற்றம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
10 நாட்கள் நடைபெறும் திருக்கார்த்திகை தீபத் திருவிழாவின் ஒவ்வொரு நாளும் காலையில் விநாயகர் மற்றும் சந்திரசேகரரும் மாலையில் விநாயகர், முருகர், அண்ணாமலையார் உண்ணாமலையம்மன், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்ச மூர்த்திகள் மாட வீதிகளில் சுற்றி வலம் வருவார்கள்.
விழாவின் முக்கிய நிகழ்வாக வரும் நவம்பர் 26ஆம் தேதி கோவில் கருவறைக்கு அருகே அதிகாலை 4 மணிக்கு பரணி தீபமும் அதனை தொடர்ந்து மாலை 6 மணி அளவில் கோவிலில் பின்புறம் உள்ள 2668 அடி உயரம் கொண்ட மலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்பட உள்ளது. இந்த தீப தரிசனத்தை காண தமிழகம் மட்டுமல்லாது பல்வேறு மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் 35 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகை தர உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.