திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் எம்ஜிஆர் நகர் மற்றும் புறவழி சாலை சந்திப்பு பகுதியில் வசிப்பவர் பாஸ் (எ)வெங்கடாஜலபதி (67).இவர் வீட்டின் முன்பு மினிமாவுமில் மற்றும் சிறிய பங்க் கடை நடத்தி வருகிறார்.
இவரின் மனைவி பிருந்தா (55) இவர்களுக்கு சூர்யா (30) என்ற மகள் உள்ளார். இவருக்கு திருமணம் ஆகி சென்னையில் வசித்து வருகிறார். வெங்கடாஜலபதி மற்றும் பிருந்தா ஆகிய இருவரும் வீட்டில் தனியாக வசித்து வருகின்றனர். வழக்கம்போல் நேற்று (28-ந் தேதி)இரவு கடை மற்றும் மாவு மில்லின் ஷெட்டர்கதவுகளை மூடி விட்டு வீட்டின் கதவை உள்பக்கமாக பூட்டிக்கொண்டு இருவரும் தூங்க சென்றனர். நேற்று (28-ந்தேதி) நள்ளிரவு நேரத்தில் முகமூடி அணிந்திருந்த 3 பேர் கொண்ட கும்பல் ஒன்று வெங்கடாஜலபதி கடையின் கதவை திறக்க முற்பட்டு உள்ளனர்.பின்னர் வீட்டின் பக்கவாட்டு வழியே உள்ளே சென்றுவீட்டின் பின்புறம் உள்ள கதவையும் தட்டினார்கள்.
சத்தம் கேட்டு வந்த கணவன் மற்றும் மனைவி இருவரும் கதவை திறந்தனர். அப்போது வெளியே நின்று முகமூடி அணிந்த 3-பேர் கொண்ட மர்ம கும்பல் வயதான தம்பதிகள் இருவரையும் வீட்டுக்குள் தள்ளி சரமாரியாக தாக்கி, பிருந்தா அணிந்திருந்த தாலிச்சரடை பிடித்து இழுத்தனர். பின்னர், வீட்டின் உள்ளே சென்று பீரோவை உடைத்து அதிலிருந்த தங்கச் செயின், தங்க நாணயம், தங்ககம்மல், சுமார் 2 1/2 கிலோ எடை கொண்ட வெள்ளி பொருட்கள், ரூ.70 ஆயிரம் ரொக்கப்பணம் ஆகியவைகளை கொள்ளை அடித்துச் சென்று விட்டனர்.
கொள்ளையான பொருட்களின் மதிப்பு சுமார் ரூ.5-லட்சம் இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது. கொள்ளை சம்பவம் குறித்து, உடனடியாக வெங்கடாஜலபதி கீழ்பென்னாத்தூர் காவல்துறையில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். மேலும் இன்று (29-ந்தேதி) காலை திருவண்ணாமலை மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் குணசேகரன் தலைமையில் கைரேகை நிபுணர் டி.எஸ் பி. சுந்தர்ராஜன் மற்றும் குழுவினர்கள் வரவழைக்கப்பட்டு ரேகைகளை பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
போக்குவரத்து பகுதி உள்ள குடியிருப்பில் நடந்த திருட்டு சம்பவம் குறித்து கீழ்பென்னாத்தூர் மற்றும் சுற்றுப்புற பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.