திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூரில் அமைந்துள்ள ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் திருத்தேர் உற்சவவிழா கடந்த 18-ந் தேதி முதல் விநாயகர் பூஜையுடன் துவங்கியது. மகாசிவராத்திரி, மயானகொள்ளை விழா, சுமங்கலி பெண்கள் கலந்துகொண்ட குங்கும அர்ச்சனை பூஜை, வல்லாள கண்டி சம்ஹார விழா என தொடர்ந்து தினமும் நடந்தவிழாக்களில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை வழிபட்டனர்.
விழாவின் முக்கிய நாளான 24-ந்தேதி காலையில் புற்று வடிவில் உள்ள அம்மனுக்கு சிறப்பு அலங்காரமும், ஆராதனைகளும் நடைபெற்றது. உற்சவ அம்மனுக்கு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகமும், ஆராதனைகளும் செய்தும், பொங்கலிட்டும் பக்தர்கள் வழிபட்டனர்.
அதனைத் தொடர்ந்து, பகல் 2 மணி அளவில் உற்சவ அங்காளபரமேஸ்வரி அம்மன் பல்வேறு வகையான வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு திருத்தேரில் எழுந்தருளியதை தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அங்காளம்மன் திருத்தேரில் வடம் பிடித்து இழுத்தால் குடும்ப பிரச்சினை நீங்கும், குழந்தை பாக்கியம் கிட்டும், தொழில் வளர்ச்சி அடையும் நினைத்தது நிறைவேறும் என்பதால் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேர் இழுத்து அம்மனின் அருள் பெற்றனர்.
விழாவில் கலந்துகொண்ட பக்தர்களுக்கு விழாக்குழுவினர் சார்பில் காலை 9:00 மணி முதல் மாலை 6 மணி வரை தனியார் திருமண மண்டபத்தில் உணவு பரிமாறி இலவச அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த திருத்தேர் உற்சவ விழாவில் பல்லாயிரங்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு அங்காளபரமேஸ்வரி அம்மனை வழிபட்டனர்.