பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும் நினைத்தாலே முக்தி தரும் திருத்தலமாகவும் விளங்கும் அண்ணாமலையார் திருக்கோயில் ஆண்டுக்கு 4 முறை கொடியேற்றம் நடைபெறும். அதில் ஆடி மாதத்தில் தட்சிணாயன புண்ணிய கால உற்சவமும், கார்த்திகை மாதத்தில் தீப திருவிழாவின் போதும், ஆனி மாதத்தில் ஆனி பிரம்மோற்சவமும் தற்போது மார்கழி மாதத்தில் உத்ராயண புண்ணியகால உற்சவம் உள்ளிட்ட 4 முறை அண்ணாமலையார் கோயிலில் தங்க கொடிமரத்தில் கொடியேற்றம் நடைபெறுவது வழக்கம்.
அதன்படி இன்று அண்ணாமலையார் கோயிலில் தை மாத பிறப்பை வரவேற்கும் விதமாக உத்திராயண புண்ணியகால பிரம்மோற்சவ விழா தங்கக் கொடி மரத்தில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.
அதிகாலை உத்ராயண புண்ணிய கால உற்சவத்தை முன்னிட்டு திருக்கோயிலில் உட்பிரகாரத்தில் உண்ணாமலை அம்மன் உடனாகிய அண்ணாமலையார், விநாயகர், பராசக்தி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அலங்கரிக்கப்பட்டு தங்க கொடிமரம் அருகில் எழுந்தருளி சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க தங்க கொடிமரத்தில் கொடியேற்றம் காலை 6.17 மணியளவில் நடைபெற்றது.
இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். கொடியேற்றத்தினை தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் உற்சவத்தில் ஒவ்வொரு நாளும் உண்ணாமுலையம்மன் உடனாகிய அண்ணாமலையார் சிறப்பு அலங்காரத்தில் அலங்கரிக்கப்பட்டு மாட வீதிகளைச் சுற்றி வந்து பக்தர்களுக்கு காட்சி தருவார். 10ம் நாளான தைப்பொங்கலன்று தாமரைக் குளத்தில் தீர்த்தவாரி நடைபெற்று விழா உற்சவமானது நிறைவு பெரும்.