தஞ்சைக்கு அடுத்தபடியாக விவசாயத்தில் திருவண்ணாமலை மாவட்டம் இரண்டாம் இடத்தில் உள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் நெல் கரும்பு மணிலா உள்ளிட்ட பயிர் வகைகளை தாண்டி பூக்கள் பயிர் செய்வதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
திருவண்ணாமலை, காஞ்சி, பெரியகுளம், பாலியப்பட்டு, கீழ்பென்னாத்தூர், கோளப்பாடி உள்ளிட்ட சுற்று வட்டார கிராம பகுதிகளில் மல்லி, காக்கடா, முல்லை, சம்பங்கி, சாமந்தி, கனகாம்பரம், ரோஜா, கேந்தி, வெள்ளை சாமந்தி, பட்டன்ரோஸ், பன்னீர்ரோஸ் உள்ளிட்ட பல்வேறு பூக்கள் பயிர் வருகின்றனர்.
திருவண்ணாமலை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் விளையும் பூக்கள் வெளி மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. தற்போது பொங்கல் பண்டிகை முன்னிட்டு திருவண்ணாமலை பூ மார்க்கெட்டிற்கு பூக்களின் வரத்து அதிகரித்துள்ளது.
குறிப்பாக மல்லி பூ 1 கிலோ 2 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. காக்கடா 1 கிலோ 1200 ரூபாய்க்கும், முல்லை 1 கிலோ 1500 ரூபாய்க்கும், சாமந்தி 1 கிலோ 130 ரூபாய்க்கும், ரோஜா 1 கிலோ 500 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்து உள்ளதால் பூக்கள் பயிர் செய்யும் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.