திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த இரும்பேட்டில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் மரம் வளர்ப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கேசவன், ஆரணி அரசினர் மகளிர் மாதிரி மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியை தாமரைச்செல்வி, இரும்பேடு ஊராட்சி மன்ற தலைவர் தரணி வெங்கட்ராமன் ஆகியோர் கலந்துகொண்டு இரும்பேடு அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டனர்.
மேலும், சுற்றுச்சூழலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நாட்டு நலப்பணி திட்ட மாணவிகள் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு கிராமத்தில் உள்ள முக்கிய வீதிகளில் பேரணியாக வந்தனர். அதைத்தொடர்ந்து நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் கிராமப்புற வேளாண் அனுபவங்கள் பயிற்சி பெற வந்த ராணிப்பேட்டை மாவட்டம் கலவையில் செயல்பட்டு வரும் ஆதிபராசக்தி வேளாண்மை கல்லூரி மாணவிகள் காடு வளர்த்தலின் முக்கியத்துவம் குறித்தும் காடுகளின் அழிவால் ஏற்படும் தீங்குகள் குறித்தும் மாதிரிகள் வைத்து பள்ளி மாணவ மாணவிகளுக்கு விளக்கம் அளித்தனர்.
இந்நிகழ்ச்சியில் இரும்பேடு அரசு உயர்நிலைப்பள்ளி மாணவ மாணவிகள், ஆரணி மகளிர் மாதிரி மேல்நிலைப்பள்ளி மாணவிகள், நாட்டு நலப்பணித் திட்ட மாணவிகள் மற்றும் கலவை ஆதிபராசக்தி வேளாண்மை கல்லூரி மாணவிகள் ப. தனலட்சுமி, மா. கீர்த்தனா, ஜீ. சந்தான லட்சுமி, இரா. சௌமியா, பா. தமிழ்ச்செல்வி, செ.இரா. வைஷ்ணவி, கிராம பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.