பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கக்கூடிய அண்ணாமலையார் ஆலயத்தில் திருவெம்பாவை உற்சவம் இன்று தொடங்கியது. இன்று காலை மாணிக்கவாசகருக்கு சிறப்பு அபிஷேக அலங்காரங்கள் செய்து நான்கு மாட வீதிகள் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
அதனைத் தொடர்ந்து இன்று மாலை இரண்டாம் பிரகாரத்தில் உள்ள சிவகாமசுந்தரி நடராஜப் பெருமானுக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க சோடச உபச்சாரம் என்று அழைக்க கூடிய 16 வகை தீப ஆராதனைகள் காண்பிக்கப்பட்டது. மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை பாடல்கள் மாணிக்கவாசகரால் திருவண்ணாமலை திருத்தலத்தில் பாடப்பட்டது.
நடராஜப் பெருமானுக்கு மகாதீப ஆராதனை முடிந்தவுடன் ஓதுவாமூர்த்திகள் மாணிக்கவாசகர் அருளிய ஆதியும் அந்தமும் இல்லா அருட் பெறும் ஜோதி எனத் தொடங்கும் பாடல்களை பாடினார். அதனைத் தொடர்ந்து மகா தீப ஆராதனை காண்பிக்கப்பட்டு மாணிக்கவாசகர் நான்கு மாட வீதிகள் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இந்த திருவெம்பாவை உற்சவத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்கள். மாணிக்கவாசகர் பெருமான் பக்தர்களுக்காக 10 நாட்கள் விரதம் இருந்து திருவெம்பாவை பாடல்களை பாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.