திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 27 ஆம் தேதி 63 அடி உயரம் கொண்ட தங்க கொடிமரத்தில் கொடியேற்றத்துடன் தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது.தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் வருகின்ற டிசம்பர் 6 ஆம் தேதி அதிகாலை அண்ணாமலையார் கருவறை முன்பு அதிகாலை 4 மணிக்கு பரணி தீபமும் அதனை தொடர்ந்து அன்று மாலை 2,668 அடி உயரம் கொண்ட தீப மலையின் மீது 6 மணிக்கு மகா தீபமும் ஏற்றப்பட உள்ளது.
டிசம்பர் 6 ஆம் தேதி மாலை 2668 அடி உயரம் கொண்ட மலை உச்சியில் 5.5 அடி உயரம் கொண்ட அர்த்தநாரீஸ்வரர் உருவம் பதித்த தீப கொப்பரையில் மகா தீபமானது ஏற்றப்பட்டு தொடர்ந்து 11 நாட்களுக்கு அண்ணாமலையார் ஜோதிப் பிழம்பாய் தீபமலைமீது பக்தர்களுக்கு காட்சியளிப்பார்.
இதற்காக மகாதீப கொப்பரையில் 4500 கிலோ நெய் மற்றும் ஆயிரம் மீட்டர் காடா துணி திரியாக பயன்படுத்தப்பட உள்ளது. மகா தீபத்திற்கு நெய் காணிக்கை பக்தர்கள் செலுத்த ஏதுவாக அருணாச்சலேஸ்வரர் திருக்கோவில் ராஜகோபுர திட்டி வாசற்படி அருகே நெய் காணிக்கைக்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. நேர்த்திக்கடன் செலுத்தும் ஆன்மீக பக்தர்கள் நெய் குடத்தை காணிக்கையாக அளித்து வருகின்றனர்.
மேலும் நெய் காணிக்கைப் பணமாக செலுத்த பக்தர்களின் வசதிக்காக ஒரு கிலோ நெய் ரூபாய் 250, அரை கிலோ நெய் ரூபாய் 150, கால் கிலோ நெய் ரூபாய் 80 என ரொக்கமாகவும் காணிக்கை பெறப்படுகிறது. திருவண்ணாமலை மாவட்ட ஆவின் நிறுவனத்திடம் இருந்து அக்மார்க் ஆவின் நெய்யை கோவில் நிர்வாகம் ரூபாய் 27 லட்சம் மதிப்பிலான 4500 கிலோ கொள்முதல் செய்து மடப்பள்ளியில் வைத்துள்ளது https://annamalaiyar.hrce.tn.gov.in என்ற கோவில் இணையதளத்தை பயன்படுத்திஆன்லைன் பரிவர்த்தனை மூலம் நெய் காணிக்கை செலுத்தும் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நெய் காணிக்கை செலுத்தும் பக்தர்களுக்கு மார்கழி மாதம் திருவாதிரை தினத்தன்று நடைபெறும் ஆருத்ரா தரிசனத்திற்கு பிறகு பிரசாதமாக வழங்கப்படும் என கோவில் நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.