உலக பிரசித்தி பெற்ற பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கக்கூடிய திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 27 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து பத்து நாட்களும் காலையிலும் இரவிலும் மாடவீதியில் சுவாமி வீதி உலா வந்து திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் வரும் டிசம்பர் 6 ஆம் தேதி அன்று அதிகாலை 4 மணிக்கு திருக்கோவிலின் கருவறை முன்பு பரணி தீபமும் அன்று மாலை திருக்கோவிலின் பின்புறம் உள்ள 2668 அடி உயரம் கொண்ட மலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்படுகிறது, இந்த மகா தீபத் திருவிழாவை காண்பதற்கும் 14 கிலோமீட்டர் தூரம் கொண்ட கிரிவலப் பாதையில் கிரிவலம் நடந்து சென்று வழிபடுவதற்கும் தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளிலும் 30 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகை புரிவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் திருக்கார்த்திகை தீப திருவிழா எந்தவித பிரச்சனைகளும் இன்றி சிறப்பாகவும் சுமூகமாகவும் நடைபெற வேண்டும் என்று திருவண்ணாமலை மாவட்ட காவல் துறை சார்பில் திருவண்ணாமலை நகர காவல் நிலைய ஆய்வாளர் சுப்பிரமணி 2668 அடி உயரம் கொண்ட மலை உச்சியில் உள்ள அண்ணாமலையார் பாதத்திற்கு சிறப்பு பூஜை செய்து வழிபட்டார்.