நினைத்தாலே முக்தி தரும் ஸ்தலமாகவும் பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும் விளங்கக் கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் இன்று அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு அண்ணாமலையார், உண்ணாமலையம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.
அதனை தொடர்ந்து அண்ணாமலையார் சந்நதிக்கு பின்புறமுள்ள வேணுகோபால சாமி சன்னதியில் உள்ள வேணுகோபாலசுவாமி, பாமா ருக்குமணிக்கு எலுமிச்சை, சந்தனம், மஞ்சள் உள்ளிட்ட பல்வேறு வகையான வாசனை திரவியங்களைக் கொண்டு அபிஷேகங்கள் நடைபெற்றது.
அதனை தொடர்ந்து பாமா, ருக்மணி சமேத வேணுகோபால சுவாமிக்கு வெள்ளி கவசம் அணிவிக்கப்பட்டு வண்ண வண்ண மலர்களை கொண்டு மாலைகள் சூட்டி பஞ்ச கற்பூர ஆரத்தி காண்பிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அதிகாலை 5.40 மணிக்கு கோவிலில் அமைந்துள்ள வைகுந்த வாயில் திறக்கப்பட்டு சிறப்பு ஆராதனை நடைபெற்றது. இதையடுத்து ஆயிரக் கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வைகுந்த வாயில் வழியாக வெளிய வந்தனர்.
தமிழகத்திலேயே சிவ தலங்களில் வைகுந்த வாயில் திறப்பது திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் மட்டும் என்பதால் கடுமையான குளிரையும் பொருட்படுத்தாமல் அதிகாலையிலேயே ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.