உலக பிரசித்தி பெற்ற பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கக்கூடிய திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலில் முப்பொழுதும் அன்னதானத் திட்டத்தினை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக துவக்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து கோயிலில் உள்ள அன்னதான கூடத்தில் பக்தர்களுக்கு தமிழக சட்டப்பேரவை துணைத் தலைவர் கு.பிச்சாண்டி மற்றும் மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் ஆகியோர் அன்னதானம் வழங்கினர்.
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலுக்கு தமிழகம் மட்டுமல்லாது அண்டை மாநிலங்களான ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு வெளி மாநிலங்களிலிருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தினந்தோறும் சாமி தரிசனம் செய்து வருன்றனர். இவர்களது பசியை போக்கும் வகையில் அருணாச்சலேஸ்வரர் கோயில் வளாகத்தில் உள்ள அன்னதான கூடத்தில் தினந்தோறும் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை மூன்று வேலைகளிலும் 3000 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட உள்ளது.
முப்பொழுதும் அன்னதானத் திட்டம் துவங்கியதையொட்டி சாதம், சாம்பார், ரசம், மோர், பொரியல், கூட்டு, வடை, அப்பளம், பாயசம் உள்ளிட்ட உணவினை தமிழக சட்டப்பேரவை துணைத் தலைவர் கு. பிச்சாண்டி மற்றும் மாவட்ட ஆட்சியர் முருகேஷ் பக்தர்களுக்கு தங்களது கரங்களால் உணவு வகைகளை பரிமாறினர்.
அதனைத் தொடர்ந்து பக்தர்களோடு பக்தர்களாக அமர்ந்து சட்டப்பேரவை துணைத் தலைவர் கு. பிச்சாண்டி, மாவட்ட ஆட்சியர் முருகேஷ், மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி உள்ளிட்ட அனைவரும் அன்னதானம் சாப்பிட்டனர். அருணாச்சலேஸ்வரர் கோயிலில் துவக்கப்பட்டுள்ள முப்பொழுதும் அன்னதான திட்டம் கோவிலுக்கு வரும் பக்தர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிகழ்ச்சியில் அருணாச்சலேஸ்வரர் கோயில் இணை ஆணையர் அசோக் குமார், மணியக்காரர் செந்தில் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் மற்றும் கோயில் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.