நினைத்தாலே முக்தி தரும் திருத்தலமாகவும் பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும் விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு அதிகாலையில் அண்ணாமலையார் உண்ணாமலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும் ஆராதனையும் நடைபெற்றது. மேலும் திருக்கோயிலில் அமைந்துள்ள சம்பந்த விநாயகருக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு வெள்ளிக்கவசம் அணிவிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சி அளித்தார். ஆங்கில புத்தாண்டு தனமான இன்று பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
மேலும் வார விடுமுறை தினம் என்பதாலும் சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்கள் மற்றும் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அண்ணாமலையாரை சாமி தரிசனம் செய்ய வந்ததால் பொது தரிசன வழியில் நான்கு மணி நேரத்திற்கு மேலாக நின்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். சாமி தரிசனம் செய்துவிட்டு வெளியே வரும் பக்தர்களுக்கு திருமஞ்சனம் கோபுரம் அருகில் திருவண்ணாமலை நண்பர்கள் குழு சார்பில் தொடர்ந்து ஏழாம் ஆண்டாக இன்று அன்னதானம் வழங்கப்பட்டது.