நினைத்தாலே முக்தி தரும் திருத்தலமாகவும் பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும் விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் கார்த்திகை தீபத் திருவிழா கடந்த நவம்பர் 27ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி டிசம்பர் 6ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு கோவில் வளாகத்தில் பரணி தீபமும் அன்று மாலை 2668 அடி உயரம் கொண்ட மலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்பட்டது.
மலை உச்சியில் தொடர்ந்து 11 நாட்கள் தீபம் ஏற்றப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்தார். இந்த தீப தரிசனத்தை காண மலை உச்சிக்கு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஏறி ஜோதி ரூபமாய் காட்சியளித்த அண்ணாமலையாரை தரிசித்து வந்தனர்.
திருவண்ணாமலையை பொறுத்தவரை மலையே சிவனாக வணங்கப்படுவதால் மலைக்கு பரிகார பூஜை செய்யப்படுவது வழக்கம். அதன்படி இன்று அண்ணாமலையார் ஆலயத்தில் இருந்து சிவாச்சாரியார்கள் சிறப்பு பூஜை செய்து வேத மந்திரங்கள் முழங்க புனித கலசத்திற்கு மகா தீப ஆராதனை காண்பிக்கப்பட்டு 2668 அடி உயரமுள்ள அண்ணாமலையார் மலை மீது அண்ணாமலையார் ஆலயத்தின் மிராசு விஜயகுமார் குழுவினர் மலை உச்சியில் இருக்கும் அண்ணாமலையார் திருப்பாதத்திற்கு கொட்டும் மழையில் சிறப்பு அபிஷேகம் செய்து தீப ஆராதனை காண்பிக்கப்பட்டது.
இந்தப் பிராயச்சித்த அபிஷேகம் திருவண்ணாமலை அண்ணாமலையார் மலைக்கு அபிஷேகம் செய்வதாக ஐதீகம் இந்த அபிஷேகம் முடிந்தவுடன் அண்ணாமலையார் ஆலயத்தில் வழக்கமாக செய்யக்கூடிய சொடச உபசாரம் என்று சொல்லக்கூடிய 16 வகை தீப ஆராதனை அனைத்து கால அபிஷேகங்களுக்கும் நடைபெறும்.