அண்ணாமலையாருக்கு அரோகரா என்ற பக்தி பரவசத்துடன் பரணி தீபம் ஏற்றப்பட்டது

நினைத்தாலே முக்தி தரும் திருத்தலமாகவும் பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும் விளங்கும் உலக பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயிலில் பல்வேறு திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம். கார்த்திகை மாதத்தில் 10 நாட்கள் உலகப் பிரசித்தி பெற்ற திருக்கார்த்திகை தீபத் திருவிழா நடைபெறும்.

இந்த ஆண்டு தீபத்திருவிழாவானது கடந்த 27 ஆம் தேதி 63 அடி உயரம் கொண்ட தங்க கொடிமரத்தில் கொடியேற்றம் நடைபெற்றது. பத்து நாட்கள் நடைபெற்று வந்த விழாவில் காலை உற்சவத்தில் விநாயகர் மற்றும் சந்திரசேகர் மாத வீதிகளை உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அதேபோல இரவு பஞ்ச மூர்த்திகளான விநாயகர், முருகர், உண்ணாமுலையம்மன் உடனாகிய அண்ணாமலையார், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகியோர் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி மாதவிதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

விழாவின் முக்கிய விழாவான 10 நாள் திருவிழா இன்று அதிகாலை சுவாமி அம்பாள் மற்றும் பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.

பின்னர் அதிகாலை 4 மணிக்கு ஆலயத்தின் கருவரை முன்பு உள்ள பிரதோஷ நந்தி சிலை அருகில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க அண்ணாமலையாருக்கு அரோகரா என்ற கோஷத்துடன் பரணி தீபம் ஏற்றப்பட்டது.

இந்த பரணி தீபம் என்பது ஏகன் அனேகன் என்னும் தத்துவத்தை விளக்கும் வகையில் ஒரு மடக்கிலிருந்து 5 மடக்கிற்கு தீபம் ஏற்றப்பட்டது.

பிரதோஷ நந்தி சிலை அருகில் ஏற்றப்பட்ட பரணி தீப மடக்கை சிவாச்சாரியார் கையில் ஏந்தியவாறு இரண்டாம் பிரகாரத்தை சுற்றி வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார், பின்னர் வைகுந்த வாயில் வழியாக அண்ணாமலையார் மலை உச்சிக்கு தீப ஆராதனை காண்பிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து மூன்றாம் பிரகாரத்தில் உள்ள உண்ணாமுலையம்மன் சன்னதியில் உள்ள உண்ணாமுலை அம்மனுக்கு ஆராதனை காட்டப்பட்டது. அதனை தொடர்ந்து கொடிமரம் அருகில் உள்ள விநாயகர், முருகர் ஆகியோருக்கு ஆராதனை காட்டப்பட்டு மீண்டும் திருக்கோயிலின் மூல ஸ்தானத்தில் ஆராதனையானது காண்பிக்கப்பட்டது.

பரணி தீபத்தை தொடர்ந்து இன்று மாலை 6 மணிக்கு அண்ணாமலையார் கோயிலுக்கு பின்புறம் உள்ள 2668 அடி உயரம் உள்ள மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட உள்ளது.

இந்த தீப ஜோதியை காண தமிழக மட்டுமல்லாது மாநிலங்களின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் 25 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்ய உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Explore additional categories

Block title

error: Content is protected !!