நினைத்தாலே முக்தி தரும் திருத்தலமாகவும், பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும் விளங்கும் திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழாவின் நான்காம் நாளான இன்று இரவு உற்சவத்தில் விநாயகர், முருகப்பெருமான், உண்ணாமலையம்மன் உடனாகிய அண்ணாமலையார், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்ச மூர்த்திகளுக்கு கோயில் இரண்டாம் பிரகாரத்தில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு 16 கால் மண்டபத்தில் அலங்காரம் நடைபெற்றது.
இதனை தொடர்ந்து விநாயகர் மூஷிக வாகனத்திலும், முருகர் மயில் வாகனத்திலும், உண்ணாமலை அம்மன் உடனாகிய அண்ணாமலையார் வெள்ளி கற்பக விருட்ச வாகனத்திலும், பராசக்தி அம்மன் வெள்ளி காமதேனு வாகனத்திலும், சண்டிகேஸ்வரர் சிறிய வெள்ளி ரிஷப வாகனத்திலும் எழுந்தருளி பஞ்சமூர்த்திகளும் ஒன்றன் பின் ஒன்றாக திருக்கோயிலின் நான்கு மாட வீதிகளிலும் உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.
திருவிழாவின் முக்கிய விழாவான பத்தாம் நாள் திருவிழா டிசம்பர் 6ம் தேதி அதிகாலை 4 மணியளவில் கோவில் கருவறை முன்பு உள்ள அர்த்த மண்டபத்தில் பரணி தீபமும் மாலை 6 மணியளவில் கோயிலின் பின்புறமுள்ள 2668 அடி உயரமுள்ள மலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்படுகிறது.