நினைத்தாலே முக்தி தரக்கூடிய அண்ணாமலையார் திருத்தலத்தில் கிரிவலப் பாதையில் உள்ள ரமணாஸ்ரமத்தில் பகவான் ரமண மகரிஷியின் 143 வது ஜெயந்தி விழா மிகவும் விமர்சையாக கொண்டாடப்பட்டது.
பகவான் ரமணா மகரிஷியின் சமாதிக்கு காலை 9 மணி அளவில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து பிரபல கர்நாடக இசைக் கலைஞர் ஸ்ரீராம் பார்த்தசாரதி பகவான் ரமண மகரிஷியின் சமாதி முன்பு ரமணரின் பக்தி பாடலை மனம் உருக பாடினார். அதனைத் தொடர்ந்து வேத விற்பன்னர்கள் வேத மந்திரங்கள் முழங்க சோடச உபசாரம் என்று சொல்லக்கூடிய 16 வகை தீப ஆராதனை காண்பிக்கப்பட்டது.
பின்னர் பஞ்ச கிளை என்று சொல்லக்கூடிய மகா தீப ஆராதனை நடைபெற்று பகவான் ரமண மகரிஷியின் WHO AM I ? என்ற புத்தகத்தை பகவான் ஸ்ரீ ரமண மகரிஷி மடத்தின் தலைவர் டாக்டர் வெங்கட் S. ரமணன் வெளியிட கே. வி. சுப்பிரமணியன் என்கிற பகவான் ரமணியின் காலத்தில் வாழ்ந்த மூத்த பக்தர் பெற்றுக் கொண்டார்.
அதனைத் தொடர்ந்து ஆசிரமத்திற்கு வந்த ஆயிரக்கணக்கான ரமண பக்தர்களுக்கு சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த ரமண மகரிஷியின் 143 ஆவது ஜெயந்தி விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு பகவான் ஸ்ரீ ரமண மகரிஷியின் அருளைப் பெற்றுச் சென்றார்கள்.