பூக்கடைகளுக்கு சீல் வைக்க முயற்சி – பூக்களை சாலையில் கொட்டி சாலை மறியல்

திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் கோயில் அருகில் தேரடி தெருவில் உள்ள ஜோதி பூ மார்க்கெட்டில் நூற்றுக்கும் மேற்பட்ட பூ வியாபாரிகள் பூக்கடை அமைத்து பூ வியாபாரம் செய்து வருகின்றனர். இந்நிலையில் நகராட்சி நிர்வாகம் கடை வாடகையினை பல மடங்கு உயர்த்தி வசூலிப்பதாக கூறி பூ வியாபாரிகள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

ஜோதி பூ மார்க்கெட் பகுதியில் சுமார் 138 கடைகளிடம் நகராட்சி சார்பில் வாடகை வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த கடைகள் அனைத்தும் சுமார் 70-ஆண்டுகளாக இருந்து வருகிறது.

இந்த சூழ்நிலையில் கடந்த 2017-ம் வருடம் நகராட்சி சார்பில் 200 சதவீதம் வாடகை மற்றும் வரி உயர்த்தப்பட்டதாக சொல்லப்பட்டது. இதனால் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் வரும்போது நகராட்சி நிர்வாகம் உயர்த்தப்பட்ட கடை வாடகையை வசூலிக்க கடுமை காட்டுவதால் பூ வியாபாரிகள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தியுள்ளனர்.

திருவண்ணாமலை நகராட்சிக்கு சொந்தமாக மொத்தம் 440 கடைகள் உள்ளன. தற்போது 360 கடைகள் செயல்பட்டு வருகின்றன. இதில் தேரடி வீதியில் பூ மார்க்கெட் இயங்கி வரும் ஜோதி மார்க்கெட்டில் மட்டும் 138 கடைகள் உள்ளது. தற்போது கடை வாடகை பத்தாயிரம் முதல் 20 ஆயிரம் வரை உயர்த்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நகராட்சி கடைகளுக்கு வாடகையை வசூல் செய்ய வந்த நகராட்சி அதிகாரிகள் கடை உரிமையாளர்களிடம் உடனடியாக கடையை விட்டு வெளியே செல்லுமாறும் அதிக பாக்கி உள்ள கடைகளை பூட்டி சீல் வைக்க முயன்றதாகவும் தெரிகிறது. இதனால் கடைக்காரர்களிடம் அதிகாரிகள் கடுமை காட்டியதால் ஆத்திரமடைந்த வியாபாரிகள் திடீரென கடையில் இருந்த பூக்களை சாலையில் கொட்டி சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சுமார் 1:30 மணி நேரத்துக்கு மேலாக சாலை மறியல் போராட்டம் நடைபெற்றதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட வியாபாரிகள் தெரிவிக்கையில் உயர்த்தப்பட்ட வாடகை மற்றும் வரியை குறைக்க வேண்டும் என்பதே தங்களுடைய ஒற்றை கோரிக்கையாக உள்ளது என தெரிவித்தனர்.

Block title

error: Content is protected !!