சொந்த செலவில் ரூ 6.40 லட்சத்திற்கு பள்ளிக்கு கழிவறை கட்டிய ஆசிரியை – பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் பாராட்டு

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அடுத்த ஐங்குணம் அரசு மேல்நிலைப்பள்ளி கடந்த 2010-ஆம் ஆண்டு உயர்நிலைப் பள்ளியில் இருந்து மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. இப்பள்ளியில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை 276 மாணவிகள் மற்றும் 180 மாணவர்கள் என மொத்தம் 456 மாணவர்கள் பயின்று வருகின்றனர்.

இப்பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை மூலம் பத்து ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கழிவறைகள் பயன்பாட்டில் இருந்துள்ளது. இந்நிலையில் பெண்கள் கழிவறை பயன்படுத்த முடியாத அளவிற்கு போதிய வசதிகள் இல்லாத சூழ்நிலை நிலவி வந்துள்ளது.

இதனைக் கண்ட அப்பள்ளியில் பணியாற்றும் ஆங்கில ஆசிரியையான ஆனிரீட்டா தனது சொந்த செலவில் கழிவறை ஏற்படுத்தித் தர நினைத்துள்ளார். இதை தொடர்ந்து தலைமை ஆசிரியரின் அனுமதியோடு பள்ளி வளாகத்தில் ரூபாய் 6.40 லட்சத்தில் மாணவிகளுக்கு எட்டு கழிவறைகளும் ஆசிரியர்களுக்கு இரண்டு கருவறைகள் என மொத்தம் பத்து கழிவறைகளை கட்டிக் கொடுத்துள்ளார்.

இந்த கழிவறைக்கு தேவையான பக்கெட், மக் உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் தனது சொந்த செலவில் வாங்கிக் கொடுத்துள்ளார் ஆசிரியர் ஆனிரீட்டா. ஆசிரியர்கள் சிலர் தனது சுயநலத்தை மட்டுமே பார்க்கக்கூடிய இக்காலகட்டத்தில் பொதுநல சிந்தனையோடு அரசுப் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியை தனது சொந்த செலவில் பள்ளிக்கு கழிவறை கட்டிக் கொடுத்திருப்பதற்கு பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோரும் பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

Block title

error: Content is protected !!