கார்த்திகை தீப தினத்தன்று அங்கீகாரம் இன்றி யாரும் கோவிலுக்குள் அனுமதிக்க முடியாது

திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோவிலில் 6 ஆம் தேதி திருக்கார்த்திகை தீபத் திருவிழா நடைபெற உள்ள நிலையில் திருக்கோவிலுக்குள் கிரிவலப் பாதை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஆன்மீக பக்தர்களின் பாதுகாப்பு குறித்து இன்று டிஜிபி சைலேந்திரபாபு பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டார். திருக்கோவிலுக்குள் வரும் பக்தர்களுக்கு பாதுகாப்பு வழங்குவது குறித்தும் பக்தர்கள் சிரமமின்றி நிறைவாக சாமி தரிசனம் செய்ய உள்ள வரிசை, பக்தர்கள் அமரும் இடம், விஐபிகள் அமருமிடம் உள்ளிட்ட பல்வேறு இடங்களை ஆய்வு மேற்கொண்டார்.

திருக்கோவில் வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த டிஜிபி சைலேந்திரபாபு கடந்த இரண்டு ஆண்டுகளாக கோவிட் பெருந்தொற்றால் வழக்கமான திருவிழாக்கள் நடைபெறாத நிலையில் இந்த ஆண்டு 30 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருவார்கள் என்றும் திருவண்ணாமலை நகரத்திற்குள் உள்ளே வரும் 4 முக்கிய சாலைகளில் காவல்துறையினர் தொடர்ந்து வாகன தணிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும், 52 இடங்களில் வாகன நிறுத்தம் செய்ய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர் ஐஜி கண்ணன் தலைமையில் 4 டிஐஜி, 27 எஸ்பிக்கள் என 12 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாகவும் பரணி தீபத்தையும் மகா தீபத்தையும் கோவிலுக்குள் காண வரும் பக்தர்களுக்கு இந்த ஆண்டு பார்கோடு வசதியுடன் கூடிய பாஸ் வழங்கப்படும் என்றும் கூறினார்.

போலியான அடையாள அட்டையை வைத்துக் கொண்டு உள்ளே நுழைய முடியாது என்றும் அவ்வாறு நுழைப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பக்தர்கள் பாதுகாப்பாகவும் சிரமமின்றியும் சாமி தரிசனம் செய்ய பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறியவர் குற்றங்களை தடுப்பதற்காக கோவிலை சுற்றியுள்ள குடியிருப்புகளில் உள்ளவர்களின் விவரங்கள் வெளிநாடு வெளிமாநிலங்களில் இருந்து திருவண்ணாமலையில் உள்ள தங்கும் விடுதிகளில் தங்கி உள்ளவர்களின் விபரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

திருவண்ணாமலை நகரப் பகுதியில் பல்வேறு இடங்களில் 500 சிசிடிவி கேமராக்கள் பொருத்தியுள்ளதாகவும் குற்றவாளிகளின் முகத்தை அடையாளம் காணக்கூடிய வகையில் புதிய தொழில்நுட்பத்துடன் அடங்கிய கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளதாகவும் கூறினார். திருக்கோவிலுக்குள் கிரிவலப் பாதைகளுக்கும் கூட்டத்தை கட்டுப்படுத்த பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறியவர், அங்கீகாரம் இன்றி கோவிலுக்குள் எந்த நபர்களும் அனுமதிக்க முடியாது என்றும் திட்டவட்டமாக கூறினார்.

Block title

error: Content is protected !!